Offline
Menu
சைவ நெறியை பரப்பிய மலேசிய குருமார்களுக்கு தமிழ்நாட்டில் கௌரவ விழா
By Administrator
Published on 08/08/2025 09:00
News

மலாக்கா,

உலக இந்து சமய ஆன்மீக கலாச்சார மையம், சிவ ஸ்ரீ கே. பிச்சை சிவாச்சாரியார் தலைமையிலான பிள்ளையார் பெட்டி, இந்தியா ஏற்பாட்டில், சிவ ஸ்ரீ அண்ணா இணையதள வாயிலாக உலகம் முழுவதும் வாழும் சைவ அன்பர்களை ஒருங்கிணைத்து சமய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வுகள் மூலம் வளர்கின்ற இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறைக்கு சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகள், ஆன்மீக விழுமியங்கள் அறிமுகமாக்கப்படுகின்றன.

இத்தனைக்கும் மேலாக 600க்கும் அதிகமான ஆன்மீக இணைய நிகழ்ச்சிகளை சுயமாக, எந்தவிதமான பதிலை எதிர்பார்க்காமல், ஈடுபாடு மற்றும் நம்பிக்கையுடன் நடத்தி வந்த குருமார்களை கௌரவிக்கும் வகையில், அண்மையில் தமிழ்நாட்டில் சிறப்பான விழா ஒன்றில் மூவருக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.

மலாக்கா பாச்சாங் பாரு ஸ்ரீ சுந்தர வீ நாயகர் மூர்த்தி ஆலய தலைமைச் சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ குமார் குருக்களுக்கு “சைவ நெறி பிரசாரகர் விருது” வழங்கப்பட்டது.

தலைநகரைச் சேர்ந்த சிவ ஸ்ரீ தயாநிதி குருக்களுக்கு “சைவ நெறி விசாரதா விருது” வழங்கப்பட்டது.

சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தலைமைச் சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ லோகநாதன் குருக்களுக்கு “சைவ நெறி விசாரதா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதுகள், உலகளாவிய சைவ சிந்தனைகளை பரப்பும் பணியில் பங்களித்த இவர்களின் அர்ப்பணிப்பையும், சைவ சமயப் பணிகளின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.

Comments