கோலாலம்பூர்,
13 வயதான மாணவி சாரா கைரினா மகாதீரின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதை அல்லது பகிர்வதை நிறுத்துமாறு மலேசிய காவல்துறை (PDRM) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது..
இந்த வழக்கைச் சூழ்ந்த செய்திகள், படங்கள் மற்றும் தகவல்களை பொறுப்பற்ற தரப்பினர்கள் சமூக ஊடகங்களில் பகிர்வதை காவல்துறை கண்டறிந்துள்ளதாக தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பாக இருந்தால், அது விசாரணை நடவடிக்கைகளில் தடையாக அமையக்கூடும்,” என அவர் எச்சரிக்கை தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை உட்பட அனைத்து விசாரணைகளும் நடைமுறையில் உள்ள சட்டங்களை பின்பற்றி நேர்மையாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், மக்கள் தவறான தகவல்களைப் பதிவேற்றுவதோ, பகிர்வதோ அல்லது விசாரணை முன்னேற்றம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சாரா கைரினா கடந்த ஜூலை 17ம் தேதி, சபா மாநிலம் கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் I மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதற்கு முந்தைய நாள், ஜூலை 16 அதிகாலை 4 மணி அளவில், பாப்பர் பகுதியில் உள்ள ஒரு மதப் பள்ளியின் விடுதி அருகே உள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டிருந்த அவர், அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தற்போது, இந்த மரணம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மலேசிய அரச போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.