தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) தனது 58ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வியாழக்கிழமை, உலகத் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்கள், பிராந்திய அமைதி, செழிப்பு, ஒத்துழைப்பை முன்னேற்றும் ஆசியானின் நிலைத்த பங்கினை வலியுறுத்தினர்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ஆசியானை “முக்கிய கூட்டாளி” எனக் குறிப்பிட்டு, நியூசிலாந்து, தென்கிழக்காசியாவுக்கிடையேயான 50 ஆண்டுகால தூதரக உறவை முன்னிட்டு இருதரப்புகளும் ஆழமான உறவுகளை வளர்த்துக் கொண்டிருப்பதை வரவேற்றார். அவர், ஆசியான் தற்போது நியூசிலாந்தின் நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளி என்றும், அங்கு தென்கிழக்காசியாவிலிருந்து சுமார் 10,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், ஆசியான் பிராந்திய அமைதி, நிலைத்தன்மை, பகிர்ந்த செழிப்பில் சாதித்தவற்றை பாராட்டினார். “ஆஸ்திரேலியா, தென்கிழக்காசியாவின் நம்பகமான கூட்டாளியாகத் தொடரும்” என்று அவர் வலியுறுத்தினார். ஆஸ்திரேலியாவின் மலேசிய தூதர் டேனியல் ஹைநெக்கி, 1974ஆம் ஆண்டு முதல் ஆசியானின் நீண்டகால கலந்துரையாடல் கூட்டாளியாக உள்ள ஆஸ்திரேலியாவின் பங்களிப்பை நினைவூட்டினார். கோலாலம்பூர் பெட்ரோனாஸ் கோபுரங்களை பின்னணியாகக் கொண்டு, ஆஸ்திரேலிய ஆசியான் தூதர் டிபனி மெக்டொனால்ட், இருதரப்புகளின் உறவு முந்தையதை விட அதிகச் செயல்பாடும் முக்கியத்துவமும் பெற்றுள்ளதாகக் கூறினார்.
ஜப்பான் மலேசிய தூதர் நோரியூகி ஷிகடா, ஆசானுடன் நம்பகமான கூட்டுறவை தொடர்ந்து பேண ஜப்பான் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். கனடாவிற்கான மலேசிய தூதர் ஜோடி ராபின்சன், சைபர்ஜெயாவில் நடைபெற்ற ஆசியான் தின விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்க தூதரகம், ஆசியானுடன் வலுவான வர்த்தக, முதலீட்டு தொடர்புகளைத் தொடர்ந்து பேணும் என்றும், அமெரிக்கா தற்போது ஆசியானின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் என்றும் தெரிவித்தது. மியான்மர் மாநில நிர்வாக கவுன்சில் தலைவர் மின் ஆங் ஹ்லைங், ஆசியான் உறுப்புநாடுகளின் அமைதியையும் செழிப்பையும் அவர் பாராட்டினார்.
வியட்நாம் வெளியுறவு துணை அமைச்சர் நியூயென் மின் வூ, “ஒத்துழைப்பே எங்களை வலுப்படுத்துகிறது, உரையாடல் எங்களை இணைக்கிறது. புதுமை எங்களை முன்னோக்கி நகர்த்துகிறது, மீட்சிதன்மை எங்களை வரையறுக்கிறது; ஆனால் ஒற்றுமையே ஆசியானின் மிகப்பெரிய சிறப்பாகும் எனக் குறிப்பிட்டார்.