20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.
உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.
அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.
விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.
இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.
அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.