கோபி, சுதாகர் நடித்துள்ள “ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.
சென்னை 'மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற யூடியூப் சேனலின் வழியே சமகால அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து பிரபலமடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். பின்னர் அந்த யூடியூப் சேனலிலிருந்து வெளியேறி 'பரிதாபங்கள்' என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோ
வெளியிட்டு பரவலான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் கோபி, சுதாகர் இணைந்து 'பரிதாபங்கள் புரொடக்சன்' மூலம் ‘ஓ காட் பியூட்டிபுல்’ என்ற படத்தினை தயாரித்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே.சி. ஜோ இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ‘ஓ காட் பியூட்டிபுல்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள 'வேணும் மச்சா பீஸ்' என்ற பாடல் வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.