ஈப்போ,
கடந்த ஒரு முதல் இரண்டு ஆண்டுகளில் ஊழல் நடவடிக்கைகளில் இருந்து சுமார் RM500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் வெற்றிகரமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது, ஊழலை எதிர்த்துப் போராடுவதில் மடாணி அரசாங்கத்தின் செயல்திறனுக்கும் அர்ப்பணிப்பிற்கும் உறுதியான சான்றாகும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
“சில தரப்பினரிடமிருந்து அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து இழிந்த கருத்துகள், கிண்டல்கள் எழுந்தாலும், நாங்கள் ஊழலை ஒழிக்க எடுத்த முயற்சிகளுக்கான வலுவான சான்றே இந்த RM500 கோடி பறிமுதல். அரசியல்வாதிகள் முதல் அமைச்சகங்கள், குடியேற்றம் முதல் சுங்கத்துறை வரை அனைத்து ஏஜென்சிகளிலும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளோம்,” என்று பிரதமர் கூறினார்.
அவர் இன்று ஈப்போ சென்ட்ரல் வளர்ச்சி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றினார். நிகழ்வில் பேராக் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ சாரணி முகமது, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், மற்றும் MRCB தலைவர் டான் ஸ்ரீ முகமது அன்வர் ஜைனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நல்ல ஆட்சி – முன்னேற்றத்தின் அடித்தளம்
உரையாற்றிய பிரதமர், வளர்ச்சித் திட்டங்களை திறம்பட நிறைவேற்றுவதில் நல்ல நிர்வாகம் முக்கிய தூண்களில் ஒன்றாக இருப்பதை வலியுறுத்தினார்.
“ஆட்சி என்பது நடைமுறைகள், வெளிப்படைத்தன்மை, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திறன் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கியது. ஈப்போ சென்ட்ரல் திட்டம் இத்தகைய நல்ல நிர்வாகத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று நம்புகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பிரதமர் பேராக் மாநில அரசு, ஈப்போ நகரசபை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அனைத்தும் திட்டத்தின் நிர்வாக அம்சங்களை மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
“ஏற்கனவே வரைவு செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் மேம்படுத்த இயலும். சரியான திருத்தங்களின் மூலம், ஈப்போ சென்ட்ரல், நம் நாட்டில் ஒரு மிகச் சிறந்த விரிவான மேம்பாட்டு மாதிரியாக உருவாகும்,” என்று அன்வர் தெரிவித்தார்.