பாசிர் சாலாக்,
சட்ட ரீதியான பிரச்சனைகள் மற்றும் அரசியல் விவகாரங்களைத் தனித்தனியாக கையாள வேண்டும், அப்போதுதான் ஒற்றுமைக் கூட்டணி அரசு வலுவாக இருக்கும் என துணைப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.
“சட்ட மீறல்கள் ஏற்பட்டால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியல் மோதல்கள் என்றால், அதனை அரசியல் தளத்தில் தீர்க்க வேண்டும். சட்ட விஷயங்களை அரசியலுடன் கலக்கக் கூடாது. இல்லையெனில் ஒற்றுமை அரசில் உள்ள 18 கட்சிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது,” என்றார் அவர் .
Program Santunan Desa என்ற நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
மேலும், அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என்றும், பிரச்சனைகளைச் பரபரப்பாகி இலாபம் தேடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். அத்தோடு தனிப்பட்ட புகழுக்காக எதையும் செய்ய முயலக் கூடாது; அது கட்சித் தலைவர்களுக்கிடையிலான நல்லுறவையும், அடிப்படை உறுப்பினர்களின் ஒற்றுமையையும் பாதிக்கும்,” என்றும் அவர் கூறினார்.