சென்னை,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினிக்கு அமீர்கான் பீடி பற்ற வைத்து விடுவது போல் காட்சி இருந்தது. இந்த காட்சியை பலர் விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தனர். இவ்வளவு பெரிய பாலிவுட் நடிகரை அழைத்து வந்து ரஜினிக்கு பீடி பற்ற வைக்க வைத்துவிட்டார் லோகேஷ் என கருத்துக்கள் வெளியானது.
அது மட்டுமின்றி முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் அமீர்கான் ஏன் நடிக்க சம்மதித்தார் எனவும் கேள்வி எழுப்பினர். விமர்சனங்களுக்கு பதில் அளித்த அமீர்கான், “ஆமாம் கூலி படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பது தான் எனது வேலை. அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் படு தீவிரமான ரஜினி ரசிகன். அவருடன் இணைந்து நடிப்பது என்பது எனக்கு பெரிய பெருமை” என கூறினார்.
இந்நிலையில், “கூலி” படத்திற்காக அமீர்கான் எந்த சம்பளமும் வாங்கவில்லை. இதுகுறித்து அவர் கூறும்போது, “ரஜினி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது. எனவே அவருடன் நடித்ததே எனவே பெரிய பரிசு.அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்றார்.