கோலாலம்பூர்:
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், நடிகர் விஜய், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, “ஸ்டாலின் அங்கிள்” என்று கூறியது குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதற்குப் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “விஜய் பேசியதில் எந்தத் தவறும் இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. இருப்பினும், விஜய் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் நேரில் பார்த்தாலும், ‘வணக்கம் அங்கிள்’ என்றுதான் பேசுவார். அதைத்தான் பொதுவெளியில் கூறியுள்ளார். தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் அப்படிப் பேசியிருக்கலாம். இது தவறான வார்த்தையே கிடையாது. இதை விடுத்து, நாட்டுக்கு என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும்” என்று விளக்கமளித்தார். தமிழக வெற்றிக் கழகம், 2026-ஆம் ஆண்டுச் சட்டமன்றத் தேர்தலில், முதல்முறையாகப் போட்டியிட உள்ளது. அந்தக் கட்சி தீவிரமாகத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது.