Offline
ஐ.டி ஊழியர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.. நடிகை லட்சுமி மேனன் குற்றச்சாட்டு
By Administrator
Published on 08/30/2025 09:00
Entertainment

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த மதுபான பாரில் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு அவர்கள் அனைவரும் பாரில் இருந்து புறப்பட்டனர். பாரை விட்டு வெளியே வந்தபிறகும் அவர்களுக்கும் தகராறு நடந்தது. அதன்பிறகு ஐ.டி. ஊழியர் அங்கிருந்து தனது காரில் ஆலுவா நோக்கி சென்றிருக்கிறார்.

அப்போது நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழி மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி தாக்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகார் செய்தார். அவர் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மதுபான பார் மற்றும் சாலைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடிகையின் நண்பர்கள், ஐ.டி.ஊழியரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது ஆள் கடத்தல், தாக்குதல், மிரட்டுதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அதில் தகராறு நடந்த போது லட்சுமிமேனன் இருந்தது தெளிவாக தெரிந்தது. ஆகவே ஐ.டி.ஊழியர் கடத்தி தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் அவரை தேடினர்.ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில் தங்களின் மீது புகார் கொடுத்துள்ள நபர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். அவர் ஜாமின் மனுவில் “புகார்தாரர் என்னை ஒரு பாரில் ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் பாரை விட்டு வெளியேறிய பிறகும், அந்த நபர் காரில் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கினார். ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ள புகார் ஜோடிக்கப்பட்டது. எனக்கும் அந்த குற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

அவரது மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, நடிகை லட்சுமி மேனனை வருகிற செப்டம்பர் மாதம் 17-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. மேலும் ஓணம் பண்டிகை விடுமுறைக்கு பிறகு வழக்கு பரிசீலிக்கப்படும் எனவும் நடிகையின் மனுவை விசாரித்த நீதிபதி தெரிவித்தார்.

Comments