தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மதராஸி’. பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். துப்பாக்கி கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் ‘மதராஸி’ படத்தினை பாராட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “மதராசி , பல சுவாரஸ்யமான நாடக தருணங்களைக் கொண்ட ஒரு கவர்ச்சிகரமான வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாகும். முருகதாஸ், கூறுகள் மற்றும் உணர்ச்சிகளை அற்புதமாக இணைத்துள்ளார். காதல் பாதையையும், குற்றப் பாதையையும் இணைத்து சிறப்பாகச் செய்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது, அதை அவர் அற்புதமாக வெளிப்படுத்தினார் – ஒரு அதிரடி ஹீரோவாகவும் பிரமிக்க வைக்கிறார்!. அனிருத்தின் பின்னணி இசை ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. வித்யுத் ஜம்வாலை பார்வையாளராக அவரது பெருமையை பாராட்ட முடியாது. படத்தை வழங்கிய முழு குழுவிற்கும் வாழ்த்துகள்”. என்று பதிவிட்டுள்ளார்.