சென்னை,வ.கவுதமன் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘படையாண்ட மாவீரா’. பூஜிதா, சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
சென்னையில் நடந்த பட விழாவில் கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசும்போது, “இன்றைக்கு சினிமாவின் போக்கும், நோக்கும் துன்பப்படும் நிலையில் இருக்கிறது. 200 படங்கள் வெளிவந்தால் அதில் 10 படங்கள் மட்டுமே வெற்றிக்கு பக்கத்தில் இருக்கின்றன. வாழ்க்கையை பார்த்து எடுக்காமல், படங்களை பார்த்து சினிமா எடுப்பதே இதற்கு காரணம். சினிமா, தற்போது தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு இருக்கிறது. இன்றைக்கு சில இயக்குனர்கள், தனது துணை இயக்குனர்களுக்கு கூட கதை சொல்வதில்லை. இதில் ரகசியம் என்ன வேண்டியுள்ளது?
7 ஆயிரம் பாடல்களை படைத்துள்ளேன். பலர் என்னிடம் உணர்ச்சியில்லாமல் பாடலை வாங்கி செல்வார்கள். சிலர் மட்டுமே பாடல்களை ரசித்து வாங்கி செல்வார்கள். பாலசந்தர், பாரதிராஜா, ரஜினிகாந்த் போன்றோருக்கு மட்டும் பாடல்களை நன்றாக எழுதுகிறீர்கள்? என்று என்னிடம் பலரும் கேட்டதுண்டு. எனக்கான முத்திரையை காப்பாற்றவே, எல்லா பாடல்களையும் சரியாகவே எழுதுகிறேன். ரசிப்பவனுக்கே என் பாடல்கள் சரியாக அமையும். நாங்கள் தெளிக்கும் கவிதைகளை கண்டுபிடித்து ரசிப்பவனே கடவுள்”, என்றார்.