பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கும்கி’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து ‘கும்கி 2′ படத்தில் பணிபுரிந்துள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தது குறித்து சுகுமார், “’கும்கி’ படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக ‘கும்கி 2’ படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள். யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.. இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் ‘கும்கி 2’ படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம். முக்கால்வாசி கதைக்கு மேல் வனப்பகுதியிலேயே நடைபெறுவதால் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு புது அனுபவம் அவர்களுக்குக் கிடைக்கும். இயக்குநர் பிரபு சாலமனின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் இது சாத்தியமானது.. அதேசமயம் இந்த படத்தில் விஎப் எக்ஸ் பணிகளும் சிறப்பாக வந்திருக்கிறது.. ” என்று தெரிவித்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
‘கும்கி2’ படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
இந்நிலையில் ‘கும்கி 2’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.