கோலாலம்பூர்,
ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (PERHILITAN) உடன் இணைந்து மெர்சிங்கில் உள்ள ஃபெல்டா டெங்காரோவில் இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, இறந்த மலாயன் புலியை (Panthera tigris jacksoni) மறைத்து வைத்திருந்த வேட்டைக்காரர்களின் முயற்சியை போலீஸின் பெடரல் ரிசர்வ் யூனிட் (FRU) புலனாய்வு குழு முறியடித்தது.
பொதுமக்களின் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதில், பெரோடுவா அல்சா காரின் உள்ளே சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டதாக நம்பப்படும் புலியின் உடற் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று, FRU தளபதி மூத்த உதவி ஆணையர் ரோஸ்லி எம்.டி. யூசோஃப் தெரிவித்தார்.
“புலிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அது ஒரு கண்ணியில் சிக்கிய பிறகு சுடப்பட்டிருக்கலாம். அத்தோடு புலியின் தலையில் ஆறு துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
ஆரம்ப விசாரணையில், மூன்று சந்தேகநபர்கள் காட்டு விலங்குகளைப் பிடிக்க கண்ணிகளை அமைத்திருந்ததாகவும், அதில் புலி சிக்கியதாகவும் தெரியவந்துள்ளது. புலியின் அதிக மதிப்பை உணர்ந்த அவர்கள், அதை வைத்திருக்க முயன்றபோது FRU குழுவால் பிடிபட்டனர்.
“விலங்கு, வாகனம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு RM294,007 என கணக்கிடப்பட்டுள்ளது.
மலாயன் புலி எமது தேசிய செல்வம். மனித பேராசையால் அதன் இழப்பு, நமது பாரம்பரியத்திற்கே துரோகமாகும். எதிர்கால சந்ததியினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் உள்ளது; எனவே, சட்டவிரோத வேட்டையாடுதலை எவ்வித சமரசமுமின்றி ஒழிப்போம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
28 முதல் 49 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேகநபர்களும், வனவிலங்குகளை வைத்திருப்பதற்கான சிறப்பு அனுமதியின்றி செயல்பட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.
அனைத்து சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மெர்சிங் காவல் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 (Akta 716) கீழ் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.