கோத்தா பாரு:
RM1.6 மில்லியன் மதிப்புள்ள குதிரை மாத்திரைகள் மற்றும் கெத்தும் இலைகளுடன் 19 வயது இளைஞர், அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது செப்டம்பர் 10 அன்று மதியம் 12.20 மணிக்கு முக்கிம் பாவ் பஞ்சியின் தேசா ரஹ்மாட் பகுதியிலுள்ள ஒரு வீட்டில், கோத்தா பாரு மாவட்ட காவல்துறை (IPD) போதைப்பொருள் குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் 108,000 குதிரை மாத்திரைகள் மற்றும் 37 கிலோ கெத்தும் இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று, கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 19 வயது இளைஞர் கிளந்தான் மாநிலத்தில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய மூளையாக இருக்கிறார் என நம்பப்படுகிறது. அவர் கடந்த மே மாதத்திலிருந்து இந்த நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என போலீசார் நம்புகின்றனர்.
“வேலையில்லாத சந்தேக நபரிடம் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மட்டுமே இருந்தது, அவர் இன்னமும் போதைப்பொருள் மூலம் வந்த பணத்தை எடுத்து எந்த சுகபோகத்தையும் அனுபவிக்கவில்லை என்றும், அவரது மோட்டார் சைக்கிளும் சோதனையின் போது கைப்பற்றப்பட்டது.
“இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல், சந்தைப்படுத்துவதற்கு முன்பு போதைப்பொருட்களை சேமிப்பதற்காக குருத்தை வீட்டையே தமது சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தியது,” என்று அவர் கிளந்தான் போலீஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
மேலும் 19 முதல் 60 வயதுடைய அவர்கள் மூவரும் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பாவனைக்கு எதிர்மறையான பதிலை பெற்றுள்ளனர். மேலும் அவர்களுக்கு எதிராக முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.
கைதுசெய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் 14 நாட்கள் (செப்டம்பர் 24 வரை) போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B மற்றும் விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.