கோலா திரெங்கானு:
பள்ளி விடுமுறை காலத்தை முன்னிட்டு திரெங்கானுவில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அங்கு ஹோட்டல் முன்பதிவுகள் 90% -ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய புள்ளிவிவரத் துறை சமீபத்தில் “நாட்டின் மகிழ்ச்சியான மாநிலம்” என அறிவித்த திரெங்கானு, தனது இயற்கை அழகும், வளமான கலாச்சார பாரம்பரியமும் காரணமாக உள்நாட்டு மற்றும் அனைத்துலக சுற்றுப் பயணிகளின் விருப்பதிற்குரிய இடமாக இன்னமும் நீடிக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தின் அழகிய கடற்கரைகள், தீவுகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் பசார் பயாங், டிராபிரிட்ஜ் போன்ற பிரபலமான இடங்களில் குடும்பத்தினருடன் நேரத்தை கழிக்க விரும்புகிறார்கள்.
ஜோகூரைச் சேர்ந்த அலியா சுல்கர்னைன் (35), நீண்ட பயணமும் சாலைகளில் நெரிசலும் இருந்தபோதிலும், திரெங்கானுவில் விடுமுறையை கழிக்க தனது குடும்பம் எடுத்த முடிவு சரியானதாக இருந்தது எனக் கூறினார்.
“குழந்தைகள் கடற்கரையில் விளையாடவும், பசார் பயாங்கில் நினைவுப் பொருட்களை வாங்கவும் மிகுந்த உற்சாகமாக உள்ளனர்,” என்றார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த முகமட் ஐமன் அஸ்மி (38) கூறுகையில், “இது எங்கள் குடும்பத்தினர் திரெங்கானுவில் கழிக்கும் முதல் பள்ளி விடுமுறை. இங்குள்ள கடற்கரை அழகும், பாரம்பரிய உணவுகளும் எப்போதும் எங்களை கவர்கின்றன,” எனக் கூறினார்.
உள்ளூர் வியாபாரியான அனி ஹுசின் (56) கூறும்போது, “பள்ளி விடுமுறையில் பசார் பயாங் கூட்டம் கணிசமாக அதிகரிக்கிறது. பலரும் கைவினைப் பொருட்களை வாங்க வரிசையில் நிற்பதை காணும்போது உற்சாகமாக இருக்கிறது,” எனக் குறிப்பிட்டார்.