கோலாலம்பூர்: ரோன்95 பெட்ரோல் மானியத்திலிருந்து பயனடைய, பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் மானிய விலையில் பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் (SKPS) கீழ் தங்கள் வாகனங்களை பதிவு செய்யுமாறு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பொது மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளில் சேவை செய்யும் 5,449 வாகனங்களை வைத்திருக்கும் 1,790 நிறுவனங்கள் செப்டம்பர் 15 முதல் நேற்று வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 249 வாகனங்களை உள்ளடக்கிய 164 நிறுவனங்கள் தங்கள் SKPS பதிவை முடித்துள்ளன. இதில் பொது போக்குவரத்து துறையில் 106 வாகனங்களைக் கொண்ட 103 நிறுவனங்களும், சரக்கு போக்குவரத்து துறையில் 143 வாகனங்களைக் கொண்ட 61 நிறுவனங்களும் அடங்கும் என்று அது இன்று காலை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ரோன்95 மானியத்திலிருந்து பயனடைய, நாடு முழுவதும் சுமார் 100,000 வாகனங்கள் பதிவுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என்று அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. https://mysubsidi.kpdn.gov.my என்ற போர்டல் வழியாக பதிவு செய்யலாம்.