சென்னை:
கல்வி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களுடன் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்பதை தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், இம்முறை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற அரசு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அங்கு மாணவர்களிடம் உரையாற்றிய அவர், “மதிப்பெண்களுக்காக கொஞ்சம் படியுங்கள், ஆனால் வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்” என்ற அறிவுரை வழங்கியதில் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
“வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமா? சம்பாதிக்க வேண்டுமா? வீடு, கார் வாங்க வேண்டுமா? பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டுமா? மதிப்பு, மரியாதையுடன் வாழ வேண்டுமா? – அப்படியென்றால் நன்றாகப் படியுங்கள்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்ட சிவா, “இவ்வகை மேடைகளில் இஷ்டப்படி பேச முடியாது. ஆனால், மாணவர்கள் தங்கள் குடும்பச் சிரமங்களை வெளிப்படையாகப் பகிர்ந்தபோது, உணவுக்குப் போராடும் நிலையிலும் முன்னேற வேண்டும் என்ற அவர்களின் உறுதி என்னைக் கவர்ந்தது,” என்றார்.
தன் வாழ்க்கை அனுபவங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்த அவர், “நான் மூன்று வேளையும் உணவு உண்ட பிறகே பள்ளிக்குச் சென்று படித்தேன். ஆனால் என் தந்தை, ஒரு வேளை உணவையே சாப்பிட்டு கஷ்டப்பட்டபடியே படித்தார். நான் ஆட்டோ, ரிக்ஷா, ரயில், பேருந்தில் பயணம் செய்து பள்ளிக்குச் சென்றேன். என் தந்தையோ நடந்தே பள்ளி சென்றார். ஒரு தலைமுறை படித்து முன்னேறினால், அடுத்த தலைமுறையையும் முன்னேற்றும் என்பதைக் குடும்பத்தில் நன்கு அனுபவித்திருக்கிறேன்,” என்றார்.