Offline
Menu
காசாவுக்கு உதவிப்பொருட்கள் கொண்டு சென்ற கப்பல்கள் தடுத்து நிறுத்தம் – கிரேட்டா தன்பெர்க் சிறைபிடிப்பு
By Administrator
Published on 10/04/2025 09:00
News

பாலஸ்தீன நகரமான காசா மீது தொடர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் உதவிப்பொருட்கள் கிடைப்பதையும் கட்டுப்படுத்தி வருகிறது.

இதனால் ஒரு புறம் இஸ்ரேலின் வெடிகுண்டு, பீரங்கி, துப்பாக்கிகளுக்கு இரையாகும் மக்கள் மறுபுறம் பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற குளோபல் சீ ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எஃப்) கப்பல்களை இஸ்ரேலிய கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது.

மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்கில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலிருந்து குளோபல் சீ ஃப்ளோட்டிலா புறப்பட்டது. இந்த ஃப்ளோட்டிலா 44 நாடுகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய கப்பல்களைக் கொண்ட குழுவாகும்.இவை இன்று (வியாழக்கிழமை) காலை உதவிகளுடன் காசாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் காசாவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் வருகை தந்த ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் பிறரை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்தி சிறைபிடித்துள்ளது.

குளோபல் சுமுட் கப்பல்கள் பாதுகாப்பாக தடுத்து நிறுத்தப்பட்டு, அதில் இருந்த மக்கள் இஸ்ரேலிய துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோதல் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று இஸ்ரேலிய கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களின் பாதையை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுமுட் புளோட்டிலா தனது அறிக்கையில், இஸ்ரேலிய கடற்படை, அல்மா, சிரியஸ் மற்றும் அதாரா ஆகிய கப்பல்களை இடைமறித்து, கப்பல்களில் ஏறி நேரடி தகவல்தொடர்புகளைத் துண்டித்ததாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் கப்பல்களில் ஏறும் வீடியோ காட்சிகளையும் சுமுட் புளோட்டிலா வெளியிட்டுள்ளது.

Comments