கோத்தா பாரு:
தாய்லாந்து போலீசார் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், 201 யாபா (மெத்தாம்பெட்டமின்) மாத்திரைகள் வைத்திருந்த மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சுங்காய் கோலோக் போலீஸ் தரப்பின் தகவலின்படி, 45 வயதான சந்தேக நபர் இன்று அதிகாலை (தாய்லாந்து நேரம்) 3 மணியளவில் சரோயன் கேட் சாலையில் உள்ள ஒரு டிம் சம் உணவகத்தின் முன்பாக பிடிக்கப்பட்டார்.
போலீசார் அவரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 199 சிவப்பு நிற மெத்தாம்பெட்டமின் மாத்திரைகள் மற்றும் 2 பச்சை மாத்திரைகள் என மொத்தம் 201 யாபா மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.இவை மலேசிய சந்தையில் சுமார் RM2,000 மதிப்பு உடையவை என போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தற்போது சுங்காய் கோலோக் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது “வகுப்பு 1 போதைப்பொருள் வைத்திருத்தல்” குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுங்காய் கோலோக் பகுதி, போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய இடமாக நீண்டகாலமாக அறியப்படுகிறது.
மலேசியாவில் ஒரு யாபா மாத்திரை சுமார் RM10 ஆக விற்கப்படுகிறதாம். தாய்லாந்தில் அதே மாத்திரை பாதி விலைக்கு கிடைப்பதால், எல்லை கடத்தலாளர்கள் அதிக லாபத்திற்காக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.