காபிட்:
ரஜாங் ஆற்றில் இன்று மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒருவரின் சடலத்தை அடையாளம் காண போலீசார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
காலை 11.25 மணியளவில் காபிட் துறைமுகம் அருகே சடலம் மிதந்து கொண்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றபோதிலும், ஆற்றின் பலத்த நீரோட்டம் சடலத்தை அடித்து கொண்டு சென்றது என்று, காபிட் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி ரோஹானா நானு தெரிவித்தார்.
பின்னர், தீயணைப்பு துறை மற்றும் குடிமைப் பாதுகாப்பு படையினர் இணைந்து சடலத்தை மதியம் 12.10 மணிக்கு தெலுக் செலிந்துங் பகுதியில் மீட்டனர். அந்த இடம், முதலில் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
சடலம் பின்னர் பரிசோதனைக்காக காபிட் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இறந்தவர் சுமார் 170 செ.மீ. உயரம் உடையவர் என்றும், பழுப்பு நிறம், வயது சுமார் 40 இருக்கும் என்றும்,
வலது தொடையின் முன்பகுதியில் கோய் மீன் பச்சை குத்தி உள்ளார் என்றும், மேலும் இரு தோள்களின் முன்பகுதியில் ஒரு தெருங் இபான் பச்சையும் உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவரங்களை கொன்டு, யாராவது தங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் காணாமல் போனதாகத் தெரிந்தால் உடனடியாக காபிட் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.