சுங்கை புலோ:
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் யாரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் உறுதியளித்துள்ளார்.
தனது அமைச்சகத்தின் விருப்பப் பட்டியல் நிதி அமைச்சகத்துக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
“பிரதமரின் பட்ஜெட் அறிவிப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். எப்போதும் கூறுவதுபோல, மடானி அரசாங்கத்தின் கீழ் எந்த சமூகமும் புறக்கணிக்கப்படமாட்டாது. இந்தியர், சீனர், மலாய் என்று தனித்தனியாக தொகை கேட்கும் பழக்கத்தை விட்டு, மடானி (MADANI) அரசு எல்லா மலேசியர்களுக்கும் சமமாக சேவை செய்கிறது,” என்று அவர் விளக்கினார்.
சுங்கை புலோ நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராகவுமுள்ள அவர், வணக்கம் தீபாவளி மடானி உணவுப்பொதி திட்டத்தின் தேசிய அளவிலான தொடக்க விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் நடைபெறும் இந்த முயற்சியில், பிரதமர், அவரது அமைச்சகம் மற்றும் அமாநா இக்தியார் மலேசியா இணைந்து பணியாற்றுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மொத்தம் 16,600 -B40 குடும்பங்கள் பயனடைவதாகவும், கூடுதலாக சுங்கை புலோ தொகுதியில் உள்ள 1,000 குடும்பங்களுக்கு தனது ஒதுக்கீட்டில் இருந்து உதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக, 50 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பொதியிலும் அரிசி, எண்ணெய், முறுக்கு மாவு, அதிரசம் மாவு, துவரம் பருப்பு மற்றும் எள்ளெண்ணெய் உள்ளிட்ட தீபாவளிக்கே உரிய பொருட்கள் அடங்கியிருந்தன.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.