ஜெய்பூர்,ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்,இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நோயாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது: அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) ஒரு ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவியது. தீ விபத்து ஏற்பட்ட போது ஐசியுவில் 11 நோயாளிகள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் கோமா நிலையில் இருந்தனர். தீ விபத்துக்கு பிறகு, உடனடியாக அவர்களை டிராலிகளில் மீட்டு, முடிந்தவரை பல நோயாளிகளை ஐசியுவிலிருந்து வெளியே கொண்டு வந்தோம். பின்னர் நீண்ட நேரம் போராடி சிகிச்சை அளித்தோம்.
சிபிஆர் மூலம் அவர்களை உயிர்ப்பிக்க நாங்கள் மிகவும் கடினமாக முயற்சித்தோம், ஆனால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நோயாளிகள் 6 பேர் உயிரிழந்தனர். இறந்த நோயாளிகளில், இரண்டு பேர் பெண்கள், நான்கு பேர் ஆண்கள் ஆவர். 5 நோயாளிகள் இன்னும் கவலைக்கிடமாக உள்ளனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.