கோலாலம்பூர்:
ஆசிய பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மலேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இதில் பாகிஸ்தான்–இந்தியா உறவுகளை சீர்செய்யும் உரையாடலை ஊக்குவிக்கும் முயற்சிகளும், காசா பகுதியில் உடனடி போர்நிறுத்தத்தை ஆதரிப்பது என்பனஅடங்கும்.
“பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் முகமட் ஷெஹ்பாஸ் ஷெரீப் உடன் நாங்கள் விரிவாக விவாதித்தோம். குறிப்பாக, இந்தியா–பாகிஸ்தான் துணைக்கண்டத்தில் அமைதியை நிலைநாட்டுவதின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் ஒருமித்த கருத்தில் உள்ளோம்,” என்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் நீடித்த அமைதியை உருவாக்குவதற்கும் பிராந்திய ஒத்துழைப்பும் கூட்டு நடவடிக்கைகளும் அவசியம். இந்த நோக்கில் பாகிஸ்தானின் உறுதியான நிலைப்பாட்டை நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இறைச்சி இறக்குமதியை மலேசியா அதிகரிக்க அரசாங்கம் உதவ முனைந்துள்ளது. அதேசமயம், பாகிஸ்தானிலிருந்து அரிசி இறக்குமதி தொடர்பிலும் ஆலோசிக்கப்படுவதாக கூறிய பிரதமர், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM), தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT), தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி (TVET), டிஜிட்டல் மற்றும் மின்-மின்னணு துறைகளில் இரு நாடுகளும் வலுவான கூட்டாண்மையை உருவாக்க முனைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஷெரீப் தனது உரையில், “பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார வளர்ச்சிக்காக இரு நாடுகளும் ஒன்றிணைந்து முன்னேற முடியும். மலேசியா நிர்ணயித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் முழுமையாக உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
“இதன் மூலம் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை மட்டும் எட்டுவது அல்ல, வருங்காலத்தில் இதை பலமடங்கு அதிகரிக்கவும் முடியும். நுகர்வோர் மகிழ்ச்சியாக இருந்தால், வானமே எல்லை,” என ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மலேசியாவிற்கு வந்துள்ள ஷெரீப், வர்த்தகம், முதலீடு, ஹலால் தொழில், கல்வி, சுற்றுலா மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை ஆராய விருப்பம் தெரிவித்தார்.
நெருக்கி காலை 10 மணியளவில் அவர் பெர்டானா புத்ரா வளாகத்தில் வந்தபோது, அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. அன்வார் இப்ராஹிம் அவரை வரவேற்றார்; பின்னர் ராயல் மலாய் ரெஜிமென்ட் முதல் பட்டாலியனின் மரியாதை அணிவகுப்பை ஷெரீப் பார்வையிட்டார்.