ஜோகூர்:
மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலை தவறாக பயன்படுத்தியதாக, இவ்வருடம் ஜனவரி முதல் இன்று வரை மொத்தம் 10 வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) தெரிவித்துள்ளது.
பூடி மடானி RON95 (BUDI95) திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து மட்டும் மூன்று வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்று, அமைச்சக இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ கூறினார்.
மொத்த வழக்குகளில், ஜோகூர் பாரு மாவட்டத்தில் ஏழு, கோத்தா திங்கி, பொந்தியான் மற்றும் சிகாமாட் ஆகிய இடங்களில் தலா ஒரு வழக்குகளும் பதிவாகியுள்ளன.
“அனைத்து வழக்குகளும் மேலதிக நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. துறை இதுபோன்ற குற்றச்செயல்களை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்கிறது, புகார் கிடைத்தவுடன் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் கூறினார்.
மேலும், பெட்ரோல் நிலைய நடத்துனர்கள் வெளிநாட்டு வாகனங்களுக்கு RON95 வழங்காமல் இருப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என லிலிஸ் சஸ்லிண்டா வலியுறுத்தினார்.
“சில சமயங்களில் கவனக்குறைவு ஏற்பட்டதாக ஆபரேட்டர்கள் தெரிவித்தாலும், அது மீண்டும் நடக்காதபடி உறுதிசெய்ய வேண்டும்,” என்றார்.