சிபு:
சமூக ஊடகங்களில் கத்தியை காட்டி மிரட்டும் வீடியோவை வெளியிட்டதற்காக, 36 வயதான இ-ஹெய்லிங் டிரைவர் ஒருவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
குற்றவியல் புலனாய்வு பிரிவு குழுவினர் மாலை 5.30 மணியளவில் சந்தேக நபரை கைது செய்ததாக முக்காம் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமது ரிசால் அலியாஸ் தெரிவித்தார்.
விசாரணையில், வீடியோ பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு கத்தி, கைப்பேசி, கார், முகமூடி மற்றும் ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான சோதனையில் எதிர்மறையான விளைவு கிடைத்ததோடு, அவருக்கு முந்தைய குற்றப் பதிவுகளும் எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது.
அவர் மேலும் கூறுகையில், “விசாரணைகளை எளிதாக்கும் வகையில், சந்தேக நபருக்கு இன்று முதல் இரண்டு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்றார்.
இரண்டு நிமிடம் 16 வினாடிகள் கொண்ட வைரலான வீடியோவில், ஒருவர் மெலனாவ் மொழியில் மிரட்டும் வார்த்தைகளை உச்சரித்து கத்தியை காட்டுகிறார். இதுகுறித்து 34 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 5 மணியளவில் போலீசில் புகார் அளித்தார்.
புகார்தாரர் மற்றும் சந்தேக நபர் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. புகார்தாரர், சந்தேக நபரின் அவமரியாதையான நடத்தை குறித்து கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த சந்தேக நபர் அச்சுறுத்தும் வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.