தெஹ்ரான்,மத்தியக் கிழக்கில் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாக ஈரான் உள்ளது. சுமார் 9 கோடி மக்கள் தொகையுடன் உள்ள ஈரான் பொருளாதாரம் கடந்த சில காலமாகவே மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அணு குண்டு ஆராய்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதனால் ஈரான் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் விலைவாசியும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே பணவீக்கத்தைச் சமாளிக்க ஈரான் நாடாளுமன்றம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது ஈரான் அரசு, தங்கள் ரியால் கரன்சியில் இருந்து நான்கு பூஜ்ஜியங்களை நீக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் நாணயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் மதிப்பும் கடுமையாகச் சரிந்திருந்தது. இதனால் தினசரி பரிவர்த்தனைகளுக்கே பல லட்சம் ரியால் கொடுக்க வேண்டி இருந்தது. இது தினசரி பரிவர்த்தனைகளைக் கடினமாக மாற்றியது. இதைக் கருத்தில் கொண்டே ஈரான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.