Offline
Menu
ஸ்பெயினில் கட்டிடம் இடிந்து நால்வர் பலி
By Administrator
Published on 10/09/2025 12:16
News

மட்ரிட் (ஸ்பெயின்):

ஸ்பெயின் தலைநகரான மட்ரிடில் 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அவசர உதவிப்பணியாளர்கள் சுமார் 15 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து நான்கு சடலங்களை மீட்டனர்.

மட்ரிட் மேயர் ஜோசே லுயிஸ் அல்மைடா, “தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் இருந்து காணாமல் போனவர்களின் உடல்களை மீட்டுள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் உறுதிசெய்கிறோம்” என்று சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

பலியானவர்களில், கட்டட மறுசீரமைப்புப் பணியில் ஈடுபட்ட 30–50 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் அந்த திட்டத்தின் வடிவமைப்புக் கலைஞரான 30 வயது பெண் ஒருவர் அடங்குவர்.

1965-ல் முடிக்கப்பட்ட இந்த கட்டிடம், 2012 மற்றும் 2022 ஆண்டுகளில் ஆய்வு செய்யப்பட்டபோது பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டிடம் 2022 முதல் சவுதி அரேபிய நிதி நிறுவனத்தின் சொத்தாக மாறி, அதனை நான்கு நட்சத்திர ஹோட்டலாக மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.

Comments