டெல்லி,தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27ம் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் எஸ்.பி. , டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழக போலீசார் விசாரிக்க தடைகோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக சட்டப்பிரிவு துணைத்தலைவர் ஜிஎஸ் மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தமிழக போலீசார் விசாரிக்க தடைகோரியும், இந்த சம்பவத்தை சிபிஐ அல்லது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு விசாரிக்கக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுதினம் விசாரணைக்கு வர உள்ளது.