ஜோகூர் பாரு:
ஜோகூர் போலீசார், RM43.54 மில்லியன் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மற்றும் அவற்றை தயாரிக்கும் கருவிகளை அதிகாரப்பூர்வமாக அழித்துள்ளனர்.
ஜோகூர் மாநில காவல் துறைத் தலைவர் சிபி டத்தோ’ அப் ரஹாமன் அர்சாத் தெரிவித்துள்ளார், இந்த சான்றுப்பொருட்கள் அழிப்பில் மொத்தம் 651 கிலோ கிராம் திடப்பொருள் போதைப்பொருட்களும், 12,243.02 லிட்டர் திரவப்பொருள் போதைப்பொருட்களும் அடங்கியுள்ளன.
2000 முதல் 2024 வரையிலான 4,528 விசாரணை வழக்குகள் தொடர்பான பொருட்களே இவ்வழிப்பில் அடங்கியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் ஹெரோயின், கஞ்சா, கெட்டமைன், மெத்தாம்பேட்டமைன், மெத்திலீன் டையாக்ஸி மெத்தாம்பேட்டமைன் (MDMA), நிமெட்டாசெபம், கெத்தும் இலைகள், யாபா மாத்திரைகள் மற்றும் வேப் திரவம் ஆகியவை அடங்கும்.
“அழிக்கப்பட்ட இந்த போதைப்பொருட்கள், கிட்டத்தட்ட 1.39 மில்லியன் நபர்களை போதைக்கு அடிமைப்படுத்தக்கூடியவை,” என்று அவர் குறிப்பிட்டார்.