Offline
Menu
மலேசியாவில் மூன்று ஆண்டுகளில் 33,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர் புகார்கள் – மனிதவள அமைச்சகம் தகவல்
By Administrator
Published on 10/09/2025 12:36
News

கோலாலம்பூர்:

2023 முதல் 2025 வரை மொத்தம் 33,545 தொழிலாளர் புகார்கள் மனிதவள அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிலாளர் புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அவரின் தகவலின்படி, 2023 ஆம் ஆண்டில் 9,452 புகார்கள், 2024 ஆம் ஆண்டில் 11,760 புகார்கள், 2025 ஆம் ஆண்டில் 12,333 புகார்கள் என பதிவாகியுள்ளன.

இதில் சம்பளத் தகராறுகள், வேலை நேர மீறல், மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை அதிகமான புகார்களில் இடம்பெற்றுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கும் போது அவர் இவாறு கூறினார்.

“மனிதவள அமைச்சகம், தொழிலாளர் துறையின் மூலம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் வேலைவாய்ப்புச் சட்டம் 1955 (சட்டம் 265), சரவாக் தொழிலாளர் ஆணை (அத்தியாயம் 76) மற்றும் சபா தொழிலாளர் ஆணை (அத்தியாயம் 67) போன்ற தற்போதைய சட்டங்களின் கீழ் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.”

ஒப்பந்தத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கெப்பாலா பத்தாஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மஸ்துரா முஹமட் எழுப்பிய கேள்விக்கு

ஸ்டீவன் சிம் இவ்வாறு பதிலளித்தார்.

புகார்கள் வரும்போது தொழிலாளர் துறை உடனடியாக ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் நடத்துகிறது.

“சட்ட மீறல்கள் உறுதியாக நிரூபிக்கப்பட்டால், நிறுவனங்களுக்கு இணக்க உத்தரவு (Compliance Order) பிறப்பிக்கப்படுகிறது. சம்பள நிலுவைத் தொகையைச் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்செயல்களை சரிசெய்ய உத்தரவிடப்படலாம். தேவையெனில், வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன,” என்றார்.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனங்களுக்கு அதிகபட்சம் RM50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்” என்று அவர் சொன்னார்.

Comments