புத்ராஜெயா,பாலஸ்தீன மக்களுக்கு உதவும் மனிதாபிமானப் பணிகளில் உள்ளூர் ஆர்வலர்களின் ஈடுபாட்டையோ, இந்த மாத இறுதியில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டுடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையையோ கேள்வி கேட்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். எகிப்து, கத்தார், ஹமாஸ் உள்ளிட்ட அனைத்துலக சமூகம் அமைதியான தீர்வைக் கண்டறிவதில் கவனம் செலுத்தி வருவதால், மலேசியர்களும் ஆரோக்கியமற்ற அரசியல் சர்ச்சைகளைத் தூண்டுவதற்குப் பதிலாக இந்த முயற்சிகளின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
எகிப்து, கத்தார், ஹமாஸ் உட்பட முழு உலகமும் அமைதி செயல்முறையின் வெற்றியை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. எனவே மலேசியாவில் நாமும் அவ்வாறே செய்து அதன் வெற்றிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். உதாரணமாக, (ட்ரம்பின்) வருகையை எதிர்க்க வேண்டாம். ஏனென்றால் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய டிரம்ப் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.