Offline
Menu
ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு நிரந்தரத் தீர்வு வழங்கிய பிரதமருக்கு நன்றி: கோபிந்த்
By Administrator
Published on 10/11/2025 12:35
News

20 வருடங்களாக சிக்கலை எதிர் நோக்கிய பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான நிரந்தரத் தீர்வை இன்று பதிவு செய்த  பிரதமருக்கு அவர்களுக்கு, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நன்றி தெரிவித்தார்.  சரியான கட்டடம் இல்லாமல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் ஆசியர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில், இந்தப் பள்ளியை கட்டுவதற்கு, சிறப்பு மானியம் ஒதுக்கப்பட்டதாக பிரதமர் இன்று 2026 வரவு செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது குறித்து இலக்கவியல் அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக கெபினில் இயங்கிய இந்தப் பள்ளி எதிர்நோக்கிய துயருக்கு, இந்த வருட தீபாவளிகொண்டாட்டத்துக்கு முன்பதாகவே, ஒளி பிறந்துவிட்டதாக அமைச்சர் வர்ணித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு தமிழ்ப் பள்ளிகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதில் மடானி அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், மலேசியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நல்ல, ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான சூழலில் படிக்கத் தகுதியானவர்கள் என்பதையும் பிரதிபலிக்கிறது. அதோடு இந்தப் பள்ளி சிறந்த பள்ளியாக முன்னேறி, நாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நல்ல திறன் வாய்ந்த, தெளிந்த சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் கூறினார்.

Rakyat’s Budget எனப்படும் மக்களை முன்னிலைப்படுத்தும் 2026 வரவு செலவு திட்டத்தில் ஏறக்குறைய 90 மில்லியன் ரிங்கிட் இந்தியர்களும் சீனர்களும் வசிக்கும் சிறுபான்மையின கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்கு செலவிட்டப்படும் என்பதை கோபிந்த் சிங் டியோ பதிவு செய்தார்.

மேற்கண்ட நிதி பகிர்வும் திட்டங்களும் தவிர, இந்திய சமூக பொருளாதார நல்வாழ்வுக்கான அமைப்புகளுக்கு, கடந்த ஆண்டை போவே மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான(MITRA), TEKUN நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா (Amanah Ikhtiar Malaysia) ஆகியவற்றுக்குRM220 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments