Offline
Menu
சைவ உணவு மறுக்கப்பட்டதால் விமானத்தில் தொண்டை அடைத்து மரணம் – கத்தார் ஏர்வேஸ்மீது வழக்கு
By Administrator
Published on 10/12/2025 16:15
News

லண்டன்:

சைவ உணவு மட்டுமே உண்ணும் ஒரு பயணி, விமானப் பயணத்தின் போது சைவ உணவு வழங்க மறுக்கப்பட்டதையடுத்து அசைவ உணவை உண்ணச் சொல்லப்பட்டதால், தொண்டை அடைத்துக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பம் கத்தார் ஏர்வேஸ்மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் ஊடகமான தி இன்டிபென்டண்ட் (The Independent) வெளியிட்ட தகவலின்படி, அசோகா ஜயவிக்ரம (Ashoka Jayawickrema) என்ற 85 வயது இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர், 2023 ஆகஸ்ட் 1 அன்று லாஸ் ஏஞ்சலிஸிலிருந்து இலங்கைக்குச் செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்தது.

அவரின் மகன் சூர்யா ஜயவிக்ரம தாக்கல் செய்த வழக்கில், தந்தை எப்போதும் சைவ உணவு மட்டுமே உண்ணுபவர் என்றும், விமானப் பணியாளர்களிடம் சைவ உணவு கேட்டபோது அது இல்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக, அவருக்கு ஒரு வழக்கமான (அசைவ) உணவு வழங்கப்பட்டதுடன்,

“அசைவப் பகுதிகளைத் தவிர்த்து சுற்றியுள்ளதை மட்டும் சாப்பிடலாம்”

என்று பணியாளர்கள் அறிவுறுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அசோகா ஜயவிக்ரம அதை உண்ண முயன்றபோது, உணவு தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக வழக்கில் கூறப்படுகிறது. அவர் எதை உண்டதில் சிக்கல் ஏற்பட்டது என்பது துல்லியமாகத் தெரியவில்லை.

அவசரநிலையின்போது, விமானப் பணியாளர்கள் மெட்ஏர் (MedAire) எனும் தொலைநிலை மருத்துவ ஆலோசனை சேவையுடன் தொடர்புகொண்டு உதவி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விமானம் அவசரமாக தரையிறக்கப்படவில்லை.

புகாரின்படி, விமானி அப்போது “நாங்கள் ஆர்க்டிக் வட்டத்தின் மீது பறக்கிறோம், எனவே அவசர தரையிறக்கம் சாத்தியமில்லை” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், வழக்கில், விமானம் அப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தின் மேல் பறந்துகொண்டிருந்தது என்றும், அதனால் அவசரமாக தரையிறக்க முடிந்திருக்க வேண்டும் என்றும் சூர்யா ஜயவிக்ரம வாதிட்டுள்ளார்.

அசோகா ஜயவிக்ரம சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் மயக்கநிலையில் இருந்ததாகவும், பின்னர் ஸ்காட்லாந்தில் உள்ள மருத்துவமனையில் ஆகஸ்ட் 3 அன்று உயிரிழந்தார் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரணக் காரணம் “அஸ்பிரேஷன் நியுமோனியா” (Aspiration Pneumonia) என்று உறுதிசெய்யப்பட்டது.

Comments