கோலாலம்பூர்:
பண்டார் உத்தமா பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், 16 வயது மாணவியை கத்தியால் குத்தி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 14 வயது மாணவனை, இன்று முதல் ஏழு நாட்கள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்க பெட்டாலிங் ஜெயா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலீசார் தாக்கல் செய்த தடுப்புக்காவல் கோரிக்கையை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷாரில் அனுவார் அமாட் முஸ்தபா அனுமதித்ததையடுத்து, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் மாணவனை அடுத்த செவ்வாய்க்கிழமை வரை தடுப்புக்கு காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் மலேசிய குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் (கொலை குற்றம்) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணை நடைமுறையின் போது, செம்மஞ்சள் நிற கைதி உடை அணிந்திருந்த அந்த மாணவனுக்கு அனுவார் எஸ்ஸாட் என்ற வழக்கறிஞர் சட்ட உதவி வழங்கினார்.
இதற்கிடையில், மாணவனை நீதிமன்றத்துக்கு கொண்டு வரும்போது, ஊடகங்கள் அவரது புகைப்படங்களைப் பதிவு செய்ய முடியவில்லை; ஏனெனில் அவர் உள் நுழைவு வழியாக நேரடியாக தற்காலிகக் காவல் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும் குறித்த மாணவரின் புகைப்படங்கள் பகிரப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, MCMC எனும் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.