கோலாலம்பூர்:
பண்டார் உத்தாமாவில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) எச்சரித்துள்ளது.
அந்த சம்பவம் குறித்த எந்தவொரு படங்கள், வீடியோக்கள் அல்லது பதிவுகளும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரின் உணர்வுகளை பாதிக்கக்கூடும் என்பதால், அவற்றை பகிர்வதையோ, மறுபதிவிடுவதையோ, பதிவேற்றுவதையோ தவிர்க்குமாறு ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் “போலீஸ் விசாரணைக்கு தடையாக இருக்காது பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,” என MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்தகைய உணர்வுபூர்வமான வழக்குகள் குறித்து சமூக பொறுப்புடன் செயல்படுவது ஒவ்வொரு மலேசிய குடிமகனின் கடமை என்றும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.