அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மலேசிய வருகையை எதிர்த்து இன்று கோலாலம்பூரில் உள்ள டத்தாரான் மெர்டேகாவில் சுமார் 100 பேர் கூடினர். பல அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்கள் அடங்கிய பங்கேற்பாளர்கள் காலை 9.30 மணியளவில் ஒன்றுகூடத் தொடங்கினர். பலர் பாலஸ்தீனக் கொடிகளை அசைத்தும், இனப்படுகொலையைக் கண்டிக்கும் பதாகைகளை ஏந்தியும், “சுதந்திர பாலஸ்தீனம்” என்று கோஷமிடுவதை காண முடிந்ததாக உத்துசான் மலேசியா தெரிவித்துள்ளது.
அமனாவின் அனைத்துலக பணியகத் தலைவர் ராஜா கமருல் பஹ்ரின் ஷா, ஆர்வலரும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவருமான தியான் சுவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணி ஆரம்பத்தில் ஜாலான் அம்பாங்கில் உள்ள அம்பாங்க் பார்க் எல்ஆர்டி நிலையம் அருகே நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் டத்தாரான் மெர்டேகாவிற்கு மாற்றப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காலை 7 மணி முதல் நண்பகல் வரை பல ரயில் நிலையங்கள் மூடப்படும் என்று ரேபிட் கேஎல் அறிவித்திருந்தது. கிளானா ஜெயா பாதையில் உள்ள அம்பாங்க் பார்க், கேஎல்சிசி; புத்ராஜெயா பாதையில் உள்ள கான்லே, பெர்சியாரன் கேஎல்சிசி, அம்பாங்க் பார்க்; புக்கிட் பிந்தாங் ஆகியவை அதில் அடங்கும்.
47ஆவது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக டிரம்ப் இன்று முன்னதாக கோலாலம்பூருக்கு வந்தார். அங்கு தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதை அவர் கண்டார். டிரம்பின் வருகைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டாம் என்று ஏற்பாட்டாளர்களை போலீசார் நேற்று எச்சரித்தனர். இணங்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.