கோலாலம்பூர்:
அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கைகெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்யும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தில் மலேசியாவின் பல சலுகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன, அதில் அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதும் அடங்கும்.
அமெரிக்கா–சீனா இடையேயான நவீன தொழில்நுட்ப விநியோகச் சங்கிலி பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாலும், இரு நாடுகளும் கனிம முதலீட்டிலும் வர்த்தக உறவிலும் பல நன்மைகளைப் பெறவிருப்பதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 16 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அரிய கனிமங்கள் உள்ளன, அவற்றின் மதிப்பு ஒரு டிரில்லியன் ரிங்கிட்டாகும். இதனால் உலகளாவிய கனிம தேவையின் சுமார் 13 விழுக்காடைப் பூர்த்தி செய்யும் வகையில் மலேசியா முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.