ஷா ஆலம்:
மலேசியாவின் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (UiTM) தமது இரண்டாவது ‘நானோ’ செயற்கைக்கோளான UiTMSAT-2 ஐ ஜப்பானில் இருந்து அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப் (ISS) வெற்றிகரமாக பாய்ச்சியுள்ளது.
ஜப்பானின் தனெகஷிமா விண்வெளி நிலையத்தில் இருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு (மலேசிய நேரம்) H3 F7 ஏவுகலன் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பு (JAXA) நேரடியாக ஒளிபரப்பியது.
UiTMSAT-2 பாய்ச்சல், மலேசியாவுக்கு மட்டுமல்லாது முழு ஆசியான் வட்டாரத்திற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது ஒரு பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் ஆசியான் வட்டாரத்தின் முதல் ‘நானோ’ செயற்கைக்கோள் ஆகும்.
இந்த திட்டம் ASEANSAT எனப்படும் பிராந்திய விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆசியான் வட்டாரத்திலுள்ள பல நாடுகளின் பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்படும் இந்த முயற்சியை UiTM 2021 ஆம் ஆண்டிலிருந்து வழிநடத்தி வருகிறது.
விண்வெளிக்கே பாய்ச்சப்பட்ட UiTMSAT-2, வரும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புவியைச் சுற்றும் வட்டப்பாதையில் தனது பணியைத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2018 ஆம் ஆண்டில் UiTMSAT-1 வெற்றிகரமாக பாய்ச்சப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து UiTMSAT-2 பாய்ச்சல், மலேசியாவின் விண்வெளி ஆய்வுத் துறையில் இன்னொரு பெருமைக்குரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.