Offline
Menu
பீகார்: சாத் பூஜையை முன்னிட்டு ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
By Administrator
Published on 10/28/2025 11:08
News

பாட்னா,சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகை சாத் பூஜை ஆகும். பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களாலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘பூர்வாஞ்சலிகள்’ மத்தியில் சாத் பூஜை மிகவும் பிரபலமானது.

இந்நிலையில், தற்போது வடமாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நவ்தோலியா பகுதியில் கங்கை ஆற்றில் புனித் நீராடுவதற்காக சென்றனர்.

அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் ஆற்றில் குளிப்பதற்காக சென்றபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த 4 சிறுவர்களும் நீந்த முடியாமல் தத்தளித்து நீரில் மூழ்கினர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த 4 சிறுவர்களும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments