Offline
Menu
“தேசிய தலைவர்” படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
By Administrator
Published on 10/28/2025 23:44
Entertainment

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. இதில் தேவராக ஜே.எம்.பஷிர் என்பவர் நடித்துள்ளார். இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பரமக்குடியைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “படத்தில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சில வசனங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிக்கடி சாதி மோதல்கள் நடக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய வசனங்களுடன் படத்தை வெளியிடுவது மீண்டும் மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே இந்த படத்துக்குத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடாது, வழங்கியிருந்தால் அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில், தணிக்கைக் குழு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்து அது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினர். இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Comments