கோலாலம்பூர்:
சிலாங்கூரின் சுங்கை ஜரோமில் உள்ள பாராங்-பாயிண்ட் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு நடந்த ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்த சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில், முகமூடி அணிந்த நால்வர் கொண்ட குழு உணவக உரிமையாளர் தம்பதியருக்கு கத்தியைக் காட்டி மிரட்டி, சுமார் RM10,000 மதிப்புள்ள தங்க நகைகளை பறித்து தப்பிச் சென்றனர் என்று, கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசால் ரட்ஸி தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மாலை 7 மணியளவில் போலீசாருக்கு புகார் கிடைத்தது என்றும், “பாதிக்கப்பட்டவர் கூறியதன்படி, முகமூடி அணிந்த மூன்று நபர்கள் உணவகத்திற்குள் புகுந்து, தம்பதியரை மிரட்டினர். அவர்கள் மனைவியின் இரண்டு தங்க நெக்லஸ்கள், கணவரின் ஒரு சங்கிலி மற்றும் இரண்டு தங்க மோதிரங்களை பறித்துச் சென்றனர்,”என்றும் கூறினார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தில், தம்பதியினர் யாருக்கும் உடல் காயம் ஏற்படவில்லை எனவும், கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனம் பெரோடுவா பெஸ்ஸா அல்லது புரோட்டான் சாகா ஆக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், அந்த வாகனத்தின் நிறம் மற்றும் பதிவு எண் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
“இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 395/397 (ஆயுதமேந்திய கொள்ளை) அடிப்படையில் விசாரணையில் உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது,” என கண்காணிப்பாளர் முகமட் அக்மல்ரிசால் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்களை ஊகங்கள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், சம்பவம் குறித்த எந்தவொரு தகவலும் தெரிந்தால், கோலா லங்காட் மாவட்ட காவல் தலைமையக செயல்பாட்டு அறை (03-3187 2222) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.