கோலாலம்பூர்:
மலேசிய நிதி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, RON97 மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்துள்ளன. புதிய விலைகள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை அமலில் இருக்கும்.
அதன்படி, RON97 லிட்டருக்கு RM3.20 என்றும், டீசல் லிட்டருக்கு RM2.95 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், மானியமில்லாத RON95 பெட்ரோலின் விலை RM2.60 என்ற அளவில் மாற்றமின்றி தொடரும்.
அதே சமயம், BUDI95 மானியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோலின் விலை RM1.99 என்ற விலையில் நிலைத்திருக்கிறது. சபா, சரவாக் மற்றும் லாபுவான் பகுதிகளில் டீசலின் சில்லறை விலை RM2.15 என்றும் மாறாமல் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளின் மாறுபாடுகளை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மக்களின் நலன் மற்றும் பொருளாதார நிலைமை பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளது.