Offline
Menu
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்
By Administrator
Published on 10/31/2025 14:11
News

வாஷிங்டன்:

அமெரிக்காவில் வெளிநாட்டினர்கள் வேலை செய்யத் தேவையான EAD (Employment Authorization Document) எனப்படும் வேலை அனுமதிச்சீட்டின் தானியங்கி புதுப்பிப்பு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு (DHS) சமீபத்தில் அறிவித்துள்ள புதிய கொள்கை அக்டோபர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் படி, அந்த தேதியிலிருந்து அல்லது அதன் பின்னர் EAD புதுப்பிப்பிற்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இனி தானாகவே நீட்டிப்பு வழங்கப்படாது.

முந்தைய நடைமுறையின்படி, EAD புதுப்பிப்பு விண்ணப்பம் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தால்கூட, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் 540 நாள்கள்வரை தங்கள் வேலையை தொடர அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், புதிய விதியின்படி தற்போதைய அனுமதி காலாவதியாகுமுன் புதுப்பிப்பு ஒப்புதல் கிடைக்காதவர்கள் உடனடியாக வேலைநிறுத்தம் செய்ய வேண்டியுள்ளது.

இதனால், வேலை அனுமதி புதுப்பிக்க விரும்பும் அனைவரும் தங்களது EAD காலாவதியாவதற்கு 180 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிநுழைவுத் துறை (USCIS) பரிந்துரைத்துள்ளது. அதேசமயம், ஒரு புதுப்பிப்பு விண்ணப்பத்தைச் செயல்படுத்துவதற்கு மூன்று மாதம் முதல் 12 மாதங்கள்வரை ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலை செய்கிற வெளிநாட்டு குடியாளர்களில் இந்தியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருப்பதால், இந்த புதிய கொள்கை இந்தியர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, H-1B விசா வைத்துள்ளோர் மற்றும் கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை) விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம்.

பல இந்தியர்கள் அமெரிக்க நிரந்தரவாசி அனுமதிக்காக 10 முதல் 20 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலைமை உள்ளது. இந்நிலையில், அவர்கள் தங்கள் குடும்பங்களின் விசா தகுதி மற்றும் வாழ்வாதாரம் அனைத்தும் இந்த இடைக்கால வேலை அனுமதிகளையே சார்ந்திருக்கின்றன. புதிய விதியால் இவர்கள் வேலை இழப்பதோடு, குடியுரிமை விதிமீறல் பிரச்சினைகளிலும் சிக்கக்கூடும் என்று குடிநுழைவுச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

நியூஜெர்சியைச் சேர்ந்த குடிநுழைவு ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:

“இந்த மாற்றம் அமெரிக்காவை தங்கள் இரண்டாவது வீடாகக் கருதும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப நிபுணர்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாளின் தாமதம்கூட அவர்களின் சட்டபூர்வமான வேலை உரிமையை இழக்கச் செய்யும் நிலை உருவாகும்,” என்றார்.

 

Comments