புதுடெல்லி,தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோன்று, பீகாரில் வருகிற நவம்பரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலை கூட்டணி அமைத்து பா.ஜ.க. சந்திக்க உள்ளது.
இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் பற்றி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பதில் அளித்து உள்ளார். அவர், பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை சந்திப்போம். 3-ல் 2 பங்கு தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பதிலளித்துள்ளார்.
அவரிடம், விஜய்யின் த.வெ.க. உடன் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என வெளிவரும் தகவல் பற்றி கேட்கப்பட்டதற்கு, தமிழகத்தில் எங்களுடைய என்.டி.ஏ. கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம். அதனால், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடி ஆலோசித்து, அந்த முடிவை எடுக்கும் என்றார்.
அப்படியென்றால் விஜய்யுடனான பேச்சுவார்த்தையை நீங்கள் மறுக்கவில்லையா என கேட்கப்பட்டதற்கு அமித்ஷா, விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றும் நான் இங்கு கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து இதில் முடிவெடுப்போம் என்று பதிலாக கூறினார். காங்கிரஸ் கட்சியினரும் த.வெ.க. உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டதற்கு, பதிலளித்த அவர், அனைவரும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதில் என்ன தவறு உள்ளது என கூறினார்.
அவர், கடந்த ஜூனில் தினத்தந்திக்கு அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் கூட்டணி அரசு அமைக்கப்படுமா..? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் அரசு அமைக்கும். அதில் பா.ஜ.க.வின் பங்கு இருக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதல்-அமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார் என்று கூறினார்.