பெங்களூரு,கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் சயது முசவீர். இவரது மனைவி அபியா பானு (வயது 25). இந்த தம்பதிக்கு பாத்திமா (1.5 வயது ), பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
இந்நிலையில், அபியா பானுவின் மூத்த குழந்தை பாத்திமா மாற்று திறனாளியாக பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அபியா பானு மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார். மேலும், கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினையும் நிலவி வந்துள்ளது.
இதனால் மிகுந்த மன வேதனையடைந்த அபியா பானு இன்று காலை கணவன் வேலைக்கு சென்றபின் தனது 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், அதே கத்தால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பச்சிளம் குழந்தைகளை கழுத்தறுத்துக்கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.