பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் கூறிய கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பணம் கொடுத்து தாம் விருது வாங்கியதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல் எனக் கூறியுள்ளார் இந்தி நடிகர் அபிஷேக் பச்சன்.
அவரது நடிப்பில் வெளியான ‘ஐ வான்ட் டு டாக்’ (I Want To Talk) என்ற படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர்’ விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது அறிவிப்பு வெளியான கையோடு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கிவிட்டன.
அபிஷேக் தன் திறமையால் அந்த விருதை வெல்லவில்லை என்றும் பணம் கொடுத்துத்தான் வாங்கினார் என்றும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து, தமது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன் .
“நான் சொல்வதை நீங்கள் நம்பப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். அதனால் உங்களை அமைதிப்படுத்த சிறந்த வழி என்னவென்றால் இன்னும் கடினமாக உழைப்பதுதான்,” என்று அபிஷேக் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
இப்படிச் செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் எந்த விருதையும் தாம் செய்யப்போகும் சாதனையையும் யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்றும் சிலரது நினைப்பு தவறானது என்பதை நிரூபிப்பேன் என்றும் அபிஷேக் பச்சன் பதிவிட்டுள்ளார்.