சென்னை:
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் அவர்களின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) 306 பேருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை, சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிறப்பு குழுவால் மேற்கொள்ளப்படுகிறது.
விசாரணை பணிகளை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகியோர் மேற்பார்வை செய்கிறார்கள்.
கரூர் மாவட்டத்தின் வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்டம் நடைபெற்ற இடத்தையும் சுற்றியுள்ள பகுதிகளையும் அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர். அதேபோல், அங்குள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, கூட்ட அனுமதி வழங்கிய கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினர், தவெக கூட்டத்தில் பங்கேற்றவர்கள், மற்றும் கூட்டத்தை ஒருங்கிணைத்த கட்சியினரிடம் மொத்தம் 306 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும்,”
என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக, அனைவருக்கும் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், திங்கட்கிழமை (நவம்பர் 3) அன்று, சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடவடிக்கை மேற்கொண்டனர்.