காத்மண்டு,இந்தியா – நேபாளம் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர்.
அப்போது அந்த முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். அதேவேளை, 4 வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்த 7 பேரில் 3 பேர் அமெரிக்காவையும், ஒருவர் இத்தாலியையும், ஒருவர் கனடாவையும், இருவர் நேபாளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.