காத்மாண்டு,நேபாளத்தின் வடகிழக்கில் யாலுங் ரி மலைச்சிகரம் உள்ளது. 6 ஆயிரத்து 920 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிகரத்தில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் மற்றும் வெளிநாட்டு மலையேற்ற வீரர்கள் கொண்ட ஒரு குழு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. அங்கு திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் அவர்கள் அனைவரும் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
மாயமானவர்களை தேடும்பணி நடந்து வந்தது. இந்த நிலையில் மீட்பு பணிக்குப் பின்பு மொத்தம் 7 மலையேற்ற வீரர்கள் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள். 2 பேர் இத்தாலியர்கள், மேலும் கனடா, பிரான்ஸ், ஜெர்மன் நாட்டை சேர்ந்த தலா ஒருவர் இறந்துள்ளது அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல கடந்த 28-ந்தேதி பன்பாரி சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 3 மலையேற்ற வீரர்கள் மாயமாகி இருந்தனர். அவர்களில் ஒருவர் 2 தினங்களுக்கு முன்பு மீட்கப்பட்டார். மற்ற இருவரும் குடிசைக்குள் இருந்தபடி பனிச்சரிவில் புதைந்துள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.